சீனாவை பின்னுக்குள் தள்ளி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக உயர்ந்துள்ளது இந்தியா… நாட்டின் பொருளாதாரத்தில் அரிசி ஏற்றுமதி முக்கிய பங்காற்றும் நிலையில், சீனாவை இந்தியா எவ்வாறு முந்தியது? என்பதை தற்போது பார்க்கலாம்…
அரிசி உற்பத்தியில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சீனாவை முந்தியதன் மூலம், அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28 சதவிகிதிம் அதாவது கால்பகுதியை தாண்டியிருக்கும் நிலையில், இந்தியாவின் சாதனையை அமெரிக்காவின் வேளாண்துறை வெளியிட்ட அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், இந்தியாவின் அரிசி உறபத்தி 152 மில்லியன் டன்களை எட்டியுள்ளதாகவும், சீனாவின் உற்பத்தி 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்து. இதன் மூலம் உலகின் அரிசி ராஜாவா மாறியிருக்கிறது இந்தியா….
அரிசியின் தோற்றம் பற்றி விவாதித்தால் அதில் இந்தியாவின் பெயர் தான் முன்நிற்கும். ஏனெனில் இந்தியாவில் பழங்காலம் தொட்டே அரிசி பயிரிடப்பட்டு நுகரப்பட்டு வருகிறது. உலகில் ஒரு லட்சத்து 23 ஆயிரம் அரிசி வகைகள் உள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இது இந்தியாவில் அரிசியின் பன்முகத்தன்மையையும், செழுமையையும் பிரதிபலிக்கிறது. எனினும், அரிசி உற்பத்தியைப் பொறுத்தவரை, இந்தியா நீண்ட காலமாக சீனாவை விட மிகவும் பின்தங்கியே இருந்தது.
இந்திய அரிசி உலகிலுள்ள 172 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய கருவியாகவும் மாறியிருக்கிறது. 2024-25ம் ஆண்டு இந்தியா 4 லட்சத்து 50 ஆயிரத்து 840 கோடி மதிப்புள்ள விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
இதில் அரிசியின் பங்கு மட்டும் 24 சதவிகிதம்… பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி மூலம், இந்தியா ஒரே ஆண்டில் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 720 கோடி மதிப்பிலான அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது.
இந்த வெற்றியில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், தைவானின் குறிப்பிடத்தக்க பங்கும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சுதந்திரத்தின் போது, இந்தியா ஆண்டுக்கு 20.58 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை மட்டுமே உற்பத்தி செய்தது.
2025 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. 1960 ஆம் ஆண்களில், இந்தியா உணவு தானியப் பற்றாக்குறையால் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் நாட்டில் நீண்ட தண்டுடைய நெல் சாகுபடியே இருந்தது, இதன் மூலம் ஹெக்டேருக்கு 800 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.
அந்த நேரத்தில், யூரியா ஒரு ரசாயன உரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. உரம் மற்றும் கூடுதல் தண்ணீரைப் பயன்படுத்துவது உற்பத்தியை அதிகரிக்கக்கூடும் என்றாலும், இந்தியாவில் குட்டையான, வலுவான தண்டு வகை நெல்வகைள் இல்லாதது குறையாக இருந்தது.
இது உற்பத்தியை அதிகரிக்கவும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் குள்ள வகைகளின் தேவைக்கு வழிவகுத்தது. தைவான் தனது குள்ள அரிசி வகையான தைச்சுங் நேட்டிங்-1 அதாவது TN1-ஐ வழங்க முன்வர, அது பசுமை புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவின் நெல் சாகுபடியை அடியோடு மாற்றியது…
அதன் தொடர்ச்சியாக 1968ம் ஆண்டு சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் ஐ.ஆர்-8 என்ற நெல் வகை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நெல்சாகுபடியில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதோடு, அதிசய அரிசி என்றும் அழைக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில், இந்திய விஞ்ஞானிகள் இந்த வகைகளை கலப்பினமாக்கத் தொடங்கினர். ஒடிசாவின், T-141 எனப்படும் உள்ளூர் அரிசி வகை, தைச்சுங் நேட்டிவ்-1 உடன் கலப்பினம் செய்ய, உள்நாட்டில் குள்ள அரிசி வகையான ‘ஜெயா’ உருவானது. இதன் தண்டு நீளம் 150 சென்டி மீட்டரிலிருந்து 90 சென்டி மீட்டராகக் குறைக்கப்பட்டது, இதனால் உற்பத்தியும் அதிகரித்தது.
உலகிலேயே அதிக அளவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா உள்ளது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்திய பாஸ்மதி வகைகளுக்கு ஒரு தனித்துவமான உலகளாவிய சந்தை உருவாகியுள்ளது. உலகின் மிக நீளமான அரிசி தானியத்தை உற்பத்தி செய்யும் சாதனையையும் இந்தியா கொண்டுள்ளது.
அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், ஒரு முக்கியமான துறையில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது. இந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு சீனாவை விட அதிகமாக இருந்தாலும், ஒரு ஹெக்டேருக்கு மகசூல் கணிசமாகக் குறைவாகவே உள்ளது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 1950–51 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு ஹெக்டேருக்கு 668 கிலோ அரிசியை மட்டுமே உற்பத்தி செய்தது. 2025–26 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி அரிசி மகசூல் ஹெக்டேருக்கு 4,390 கிலோவை எட்டும் என்று USDA மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இது உலக சராசரியை விடக் குறைவாகவே உள்ளது, சீனாவின் மகசூல் ஹெக்டேருக்கு சுமார் 7,100 கிலோவாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஹெக்டேருக்கு 4,390 கிலோ கிடைப்பது நம் முன் இருக்கும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.
















