தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார் என தெரிவித்தார்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த நாள் இன்று என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கென சமூகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை உடைத்து அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரர். ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட போர்க்களத்தில் நின்ற அசைக்க முடியாத தைரியத்தின் உறுதியான வரலாற்று ஆவணம் ராணி வேலுநாச்சியாரின் வாழ்க்கை என்றும் கூறியுள்ளார்.
தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கையின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழும் என கூறியுள்ளார்.
வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக! இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போராடிய பெண் அரசியாக திகழும் அம்மையார் வேலுநாச்சியார் அவர்கள், மிகுந்த தீரத்துடனும் வீரத்துடனும் களம் கண்டார் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பியர்களுக்கு எதிராக மருது சகோதரர்களோடு இணைந்து போரிட்டு திருப்பத்தூர் கோட்டையை கைப்பற்றிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரது வீரதீர நினைவுகளைப் போற்றி வணங்குவோம் என்றும் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாலை விடுத்துள்ள பதிவில், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய, முதல் இந்தியப் பெண் வீராங்கனை, மகாராணி வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
அரசியல் அறிவும், தைரியமும், மக்கள் மீதான அக்கறையும் உடையவராகத் திகழ்ந்தவர். தமிழ் மண்ணில் பெண்கள் துணிச்சலிலும் தீர்க்கத்திலும் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் வேலு நாச்சியார். அறத்திலும் மறத்திலும் சிறந்து விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் புகழ் போற்றி வணங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
















