பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான காளைகளையும், காளையர்களையும் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், அப்பண்டிகையை அலங்கரிக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான களமும் சேலத்தில் தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த பாகுபலி காளை முதலிடம் பெற்று சேலத்திற்கு பெருமை தேடித் தந்த நிலையில், நடப்பாண்டில் காளைகளை தயார் படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி, வாழப்பாடி, அயோத்திப்பட்டினம், வெள்ளாள குண்டம், வீரபாண்டி நெய்க்காரப்பட்டி என சுமார் 50க்கும் அதிகமான இடங்களில் ஜல்லிகட்டு காளைகள் மற்றும் காளையர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் டோக்கன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது என மாடுபிடி வீரர்களும், காளையர்களின் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி என்பது வீர விளையாட்டு என்பதை தாண்டி தமிழகத்தின் அடையாளமாகவும், பண்டைய காலத்தின் பாரம்பரியமாகவும் பார்க்கப்படுகிறது. காளைகள் மற்றும் காளையர்களின் வீரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிக்கட்டில் எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது என்பது தான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
















