புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள “தமிழகம் தலை நிமிர தமிழனின் எழுச்சி பயணம்” நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் தமிழகம் தலை நிமிர, தமிழனின் எழுச்சி பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ் கோயல், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளத்து வயல் பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக வடிவில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட திடலில் 60 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளதாகவும், 15க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் பகுதி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















