2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் நிறைவு விழா புதுக்கோட்டை பள்ளத்திவயலில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, 2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு பலிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகம் வளர்ச்சி காண முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், ஒட்டுமொத்த தமிழக அரசும் கடனில் இயங்குவதாக விமர்சித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பீகாரில் என்டிஏ கூட்டணிக்கு வீசிய ஆதரவு அலை தமிழகத்திலும் வீசப் போவதாக தெரிவித்தார். மேலும் திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் இருக்கும் எழுச்சி, திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவதிலும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
















