சென்னையில் திமுக நிர்வாகி துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலையில் பச்சையம்மன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில், திமுக 63 வது வட்டச் செயலாளர் பிரபாகரன் என்பவரின் துணையுடன் சட்டவிரோதமாக கடைகள் செயல்படுவதாக தெரிகிறது.
இதனால் நடப்பதற்கு போதிய அளவில் பாதை இல்லாமல் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் திமுக நிர்வாகி மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து இரவு நேரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் சட்டவிரோத கடைகளை அகற்ற வேண்டும் எனவும் இல்லையென்றால் தொகுதிக்குள் உதயநிதி நுழைய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
















