பொங்கல் பரிசு ரூ.8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல் திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல் பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
அதிமுக ஆட்சியில் 2021– இல் பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் ரொக்கமாக வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2022, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2024–ஆம் ஆண்டு பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்கு தரவேண்டிய பொங்கல் பரிசுப் பணத்தில் 2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை எட்டாயிரம் ரூபாய் பணத்தை திருடி, 2026–ஆம் ஆண்டு மட்டும் 3000 ரூபாய் அதிகபட்ச பணத்தை அள்ளித் தருவது போல்,
தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 2021 ஆம் ஆண்டு அதிமுக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியது போல் வழங்கி இருக்க வேண்டிய தொகையில், திமுக அரசு கொடுக்காமல் ஏமாற்றிய ஐந்தாயிரம் ரூபாயையும் தற்போதைய பொங்கல் பரிசு ரூ.3000 ரூபாயும் சேர்த்து, தமிழக மக்களுக்கு ரூ.8000 பொங்கல் பரிசை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக, நேர்மையாக அறிவிக்க வேண்டும் என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
















