பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓலா, ராபிடோ, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் பாரத் டாக்சி என்ற செயலியை உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பாரத் டாக்சி செயலியில் கமிஷன் வசூலிக்கப்படாமல், பயணி செலுத்தும் முழு தொகையும் ஓட்டுநருக்கு கிடைக்கும் அம்சம் உள்ளதால், பாரத் டாக்சி செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது வரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், தினசரி 45 ஆயிரம் புதிய பயனர்கள் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் 9வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ள பாரத் டாக்சி செயலியை சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
















