ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள இருசு மண்டா கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணியின்போது கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர், ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆனால், கிணற்றில் இருந்து அதிகளவில் எரிவாயு வெளியேறியதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். 20 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ஆனால், தொடர்ந்து எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் கிணற்றை மூடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருசு மண்டா உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
















