பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தும் காளை வளர்ப்போர் சிலர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் தான் இந்தச் சுதந்திரா தேவி. காளை வளர்ப்பதில் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சுதந்திரா தேவி மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் காளை வளர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமுறை, தலைமுறையாகக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சுதந்திரா தேவியின் குடும்பம் 22 காளைகளைத் தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி வளர்த்து வருகின்றனர்.
சுதந்திரா தேவியைப் போலவே அவரது பேத்திக்கும் காளை வளர்ப்பில் அதீத ஈடுபாடு உள்ளது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காளை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கிய ஹாசிணி, தற்போது வரை தனது பாட்டி சுதந்திரா தேவிக்கு உறுதுணையாக இருந்து காளைகளைக் கவனித்து வருகிறார்.
மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குக் காளைகளை அழைத்துச் செல்லும்போது, காளைகளை அவிழ்த்துவிடுவதற்கான போதிய ஏற்பாடின்மை, பரிசுகள் வழங்குவதில் குளறுபடிகள் எனப் பல்வேறு சிரமங்கள் இருக்கும் நிலையில், அதனைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு, ஜல்லிக்கட்டு களத்தில் போதுமான சேசிங் பாயிண்ட் இல்லாத நிலையில், வழித்தவறி காளைகள் செல்வதை தடுக்க அரசே முன்வந்து காளைகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர் பொங்கல் திருநாளுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், அதற்கேற்ப காளைகளைத் தயார்படுத்தும் பணியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
காளைகளும், காளையர்களும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுவதை உரிய ஏற்பாடுகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
















