பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோர் மீது, திமுக ரவுடிகள் நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் கோர முகத்தை கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால், திமுக-வினர் இதுபோன்ற வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்,விவாதங்களில் மக்கள் பிரதிநிதிகளாக கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு கூட, திமுக-வினர் வன்முறையை பதிலாக அளிப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல, அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவிலும், பகுத்தறிவு மேலோங்கும்போது, திமுக-வினரின் ஒரே பதில் வன்முறை மட்டும் தான் என அவர் விமர்சித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா உள்ளிட்டோரை தாக்க, நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் கொடிய ஆயுதங்கள் மற்றும் சோடா பாட்டில்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவும் விதமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக திமுக குண்டர்களை பாதுகாக்க காவல்துறை இயந்திரம் அதிக நேரம் வேலை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் கருத்து வேறுபாடுகள் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்டு, தெருக்களில் பயம் ஆட்சி செய்த திமுக-வின் இருண்ட நாட்களை இந்த சம்பவம் நினைவூட்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















