நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பாகிஸ்தானில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் CPEC (China-Pakistan Economic Corridor) திட்டங்களில், பணிபுரிந்து வந்த சீனர்கள் சுமார் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவை பெரும்பாலும் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் நிகழ்ந்தவை. பாகிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக இதனைத் தடுப்பதில் தோல்வியடைந்து வந்தது சீனாவிற்கு கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதனால், தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எண்ணிய சீனா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பில் நேரடியாக இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு படைகள், உள் பாதுகாப்பு நிலையங்கள் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு வந்தது.
அதன் காரணமாகப் பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், சீனாவின் கண்காணிப்பு மற்றும் நேரடி நடவடிக்கைகளின் கீழ் வரத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், சீனாவின் அழுத்தத்திற்கு படிப்படியாக அடிபணிந்து வரும் பாகிஸ்தான், புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
இது அந்நாட்டு அரசு தனது சுயாதீனத்தை இழந்துள்ளதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுடன், பயங்கரவாத செயல்பாடுகளைச் சமாளிக்க முடியாமல் சீனாவின் கண்காணிப்பில் முழுமையாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.
அதே நேரத்தில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், சீனா இரு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. CPEC மற்றும் பிற திட்டங்களில் பணிபுரியும் சீன தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், சீன முதலீடுகள் மற்றும் நிதியோட்டங்கள் பாகிஸ்தானில் நேரடியாகச் செயல்படும் தனித்துறை அமைப்பின் கீழ் எளிதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சிக்கலான நிலையை உருவாக்குகியுள்ளன. குறிப்பாக, கில்கிட் – பாலிஸ்தானில் சீன பாதுகாப்பு படைகள் இந்தியாவின் வடக்கு எல்லைகளுக்கு மிக அருகே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதால், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு சவால்கள் மேலும் வலுவடைந்துள்ளன.
இதனால் இந்தியா, வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் மட்டுமல்லாமல், தெற்காசிய மற்றும் தென்னிந்திய எல்லைகளிலும் புதிய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
















