குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. இந்த கோயில் மீது கி.பி. 1,026 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலின் ஆயிரமாவது ஆண்டை நினைவு கூறும் வகையில் சுயமரியாதை திருவிழா நடைபெற்று வருகிறது.
கஜினி முகமதுவால் பலமுறை கோயில் இடிக்கப்பட்டாலும் இந்துக்கள் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கோயிலைக் கட்டியதால் சுயமரியாதை விழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்காக கடந்த 8-ஆம் தேதி முதல் 72 மணிநேரம் தொடர்ச்சியாக ஓம்கார மந்திர உச்சாடனம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் நலன்வேண்டி சோமநாதரை மனமுருகி வழிபட்டார்…
தொடர்ந்து ஓம்கார மந்திர உச்சாடன நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மந்திரத்தை உச்சரித்து பிரார்த்தனை செய்தார்..
இதையடுத்து 3 ஆயிரம் ட்ரோன்களைக் கொண்டு பிரமாண்டமான ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. சோமநாதர் கோயிலின் வரலாறு, அதன் மீட்சி மற்றும் சிவனின் உருவங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன…
ட்ரோன் கண்காட்சி முடிந்த பிறகு பிரதமர் மோடி திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தார். அப்போது வண்ண மயமான வாணவேடிக்கைகள் வானை அலங்கரித்தன…
இதையடுத்து சோமநாதர் கோயில் அறக்கட்டளையின் தலைவரான பிரதமர் மோடியின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோயிலின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை விளக்கும் நவீன அருங்காட்சியகப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் ஆலோசித்தார்.
மேலும், வெளிநாட்டு மற்றும் பிற மாநிலப் பயணிகளுக்கு வசதியாக பல மொழிகளில் ஆடியோ வழிகாட்டிகள் மற்றும் டிஜிட்டல் திரைகளை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
















