பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார்
சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேவின் பெயரில் புனேவில் உள்ள கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தில், இந்த ஆண்டுக்கான புனே பொதுக் கொள்கை விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வெற்றி குறித்தும் பாகிஸ்தானின் தோல்வி குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்திய உடனேயே, பாகிஸ்தானில் அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்கள், போரில் பாகிஸ்தானின் தோல்வியை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அரசியலமைப்பின் 243 வது பிரிவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் பாகிஸ்தானின் பாதுகாப்பில் முக்கிய மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. கூட்டுத் தலைமை ஊழியர் குழுவின் தலைவர் பதவி நீக்கப்பட்டது, அதற்குப் பதிலாக முப்படைகளின் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், மூன்றுப் படைகள் மட்டுமில்லாமல் பாதுகாப்புத் துறையின் மொத்த அதிகாரமும் ஒரே நபரிடம் குவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தேசிய வியூக பிரிவையும், புதிய ராக்கெட் படைப் பிரிவையும் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தான் கொண்டுவந்துள்ள இந்த மாற்றம், பாதுகாப்புத் துறையில் முப்படைகளின் கூட்டுச் செயல்பாட்டின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கூறிய அனில் சௌகான், இத்தகைய அதிகாரக் குவிப்பு பாகிஸ்தானின் ராணுவ அமைப்புக்குள்ளே கடுமையான சவால்களை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது இந்திய முப்படைகளின் பாதுகாப்புத் திறனுக்குக் கிடைத்த வெற்றியையும் பாகிஸ்தானின் தோல்வியையும் சுட்டிக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார். முப்படைத் தளபதிகள்மீது தமக்கு நேரடி அதிகாரம் இல்லை என்றாலும், முப்படைகளின் செயல்பாட்டுக்குப் பொறுப்பு உள்ளதாகத் தெளிவுபடுத்திய அனில் சௌகான், ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயல்படுதலை உறுதி செய்யும் வகையில் முடிவுகள் கூட்டாக எடுக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் கீழ் உள்ள சிறப்புப் படைகளுடன், விண்வெளி, சைபர், மின்காந்த மற்றும் அறிவாற்றல் போர் போன்ற வளர்ந்து வரும் செயல்பாட்டுத் களங்களை நேரடியாக மேற்பார்வையிடும் பொறுப்பும் தமக்கு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரின் முதன்மை உந்துசக்தியாகப் புவியியலுக்குப் பதிலாகத் தொழில்நுட்பம் பெருகி வருவதாகச் சுட்டிக் காட்டிய அனில் சௌகான், எதிர்கால போர்கள் தொடர்பு இல்லாத மற்றும் இயக்கமற்ற வழிமுறைகளை அதிகம் சார்ந்திருக்கும் என்றும், பாரம்பரிய தரைவழிப் போர் மிகக் கொடூரமானதாகவும், அதிக வீரர்கள் தேவைப்படுவதாகவும் இருக்கும் என்றும் கூறியுளளார்.
Balakot, Uri மற்றும் Operation Sindoor மட்டுமில்லாமல் Doklam மற்றும் Galwan எல்லை மோதல்களிலிருந்து, உயர் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான பாடங்கள் கற்றுக் கொள்ளப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை தேசப் பாதுகாப்பில் அடைந்துள்ள முன்னேற்றம்குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள அனில் சௌஹான், அனைத்து விதமான அவசர சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட அமைப்பை உருவாக்குவதில் பணியாற்றி வருவதாகவும், குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஒருங்கிணைந்த கட்டமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்
















