ஐக்கிய நாடுகள் சபை காலாவதியாகும் நேரத்தில் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கின் மையமாக இருக்க முயற்சி செய்து வருகிறது.வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா தான் விஸ்வ குருவாக உள்ளது என்று கூறப்படுகிறது.
1945-ல் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மீது இரண்டாம் உலகப் போரின் புகை சூழ்ந்தது. உலகப் பொருளாதாரமும் சமூக அமைப்பும் சீர் குலைந்தன. இனி ஒரு போர் வரக் கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், ஐநா சபை என்று பெயர் சூட்ட ஐநா சபை உருவானது.
உலக அமைதிக்கும் ஒத்துழைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகச் செயல்பட்டு வந்த ஐநா சபையின் நோக்கங்கள், தொடங்கி 80 ஆண்டுகளுக்குப் பிறகு சாசனத்தில் மட்டுமே இருக்கிறது.
நடைமுறையில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. எல்லா நாடுகளுக்கும் ஐநா சபைமீதான இந்தப் புகைச்சல் வளர்ந்துவரும் நிலையில் கடந்த வாரம், 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளும் நிர்வாக உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
ஏற்கெனவே மன்றோ கோட்பாட்டின் படி தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்த அதிபர் ட்ரம்ப், பூமியின் மேற்கு அரைக்கோள நாடுகளில் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், பெரிய அளவில் நிறுவன ரீதியாகவும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார்.
அமெரிக்காவைப் போலவே ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கான சொந்த மண்டலத்தில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பா, காகசஸ் பிராந்தியம் மற்றும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளைத் தனது சொந்தப் பின்புலமாக ரஷ்யா வைத்துள்ளது. தைவான், மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய சொந்த செல்வாக்கு மண்டலத்தைச் சீனா உருவாக்கி வருகிறது.
ரஷ்யா, அதன் பங்கிற்கு, பலதரப்பு ஒருமித்த கருத்து என்ற மாயையை நீண்ட காலமாகக் கைவிட்டுள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய ஒழுங்கை மாஸ்கோ ஒரு மேற்கத்திய திணிப்பாகக் கருதுகிறது மற்றும் அதிகாரத்தைப் பற்றிய ஒரு அப்பட்டமான, பிராந்திய புரிதலுக்குத் திரும்பியுள்ளது.
ஐ.நா. தீர்மானங்களைவிட புவியியல், வரலாறு மற்றும் படை முக்கியமானது என்று அறிவிப்பாகவே உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. தென் சீனக் கடல் முதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள்வரை புதிய விதிமுறைகளைத் தனது சிவப்பு கோடுகளாகச் சீனா வரைந்து வருகிறது. அணிசேரா இயக்கத்தை முதலில் வழிநடத்திய இந்தியா, தனக்கான சொந்த செல்வாக்கு உள்ள மண்டலத்தை உருவாக்கும் தருணத்தில் உள்ளது.
அணுசக்தி நாடாக மட்டுமில்லாமல், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக, உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமாக, இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் ஒரு முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
உலகின் தார்மீக மனசாட்சியாக விளங்கும் இந்தியா தன்னை ஒரு விஸ்வ குருவாக நிலை நிறுத்தி உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா,ஐரோப்பிய யூனியன், சவூதி உள்ளிட்ட இஸ்லாமிய வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இஸ்ரேல் எனப் பூமி கோளத்தின் அனைத்து நாடுகளுடனும் சமநிலையுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
சொல்லப்போனால், ஐ.நா-வை நிராகரிக்காத இந்தியா, விதிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், புதிய உலக விதிமுறைகளை உருவாக்கி வருகிறது. அணிசேராமல் இருந்தாலும், பிரச்சினை அடிப்படையிலான கூட்டணிகளைக் குவாட், பிரிக்ஸ் என்று முன்னெடுத்து வருகிறது.
ரஷ்யா குறித்து மன்னிப்புக் கோராமலும், சீனாவிடம் மென்மை காட்டாமலும் மேற்கத்திய நாடுகளின் பாசாங்குத்தனத்தைக் கேள்வி கேட்கும் நெஞ்சுரம் உள்ள நாடாக இந்தியா நிமிர்ந்து நிற்கிறது. சார்க் அமைப்பின் காலம் முடிந்துவிட்டது,
பிரிக்ஸ் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. உலக தெற்கு நாடுகளுக்குத் தலைமை தாங்கி, தனக்கான புதிய செல்வாக்குள்ள மண்டலத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.
தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தியாவின் சொந்த அதிகார வட்டம் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
















