பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பேரிச்சம்பழம், வாழைப்பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, தேங்காய் என பல்வேறு உணவுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டு அவைகளுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பரிசுகளை வென்றுவரும் காளைகளை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
டோக்கன் முறையாக இருந்தாலும் சரி, அதற்கு பின் தற்போது கடைபிடிக்கப்படும் ஆன்லைன் நடைமுறையாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான் ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பித்த பின்பும் கூட இப்பகுதி காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் காளைகளுக்கு அனுமதி கிடைப்பதாக குறிப்பாக டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காளைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மட்டுமே 30க்கும் அதிகமான காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ஒருசில அரசியல் காரணங்களுக்காக அக்காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது அப்பகுதி மக்களிடையேயும், காளைகளை வளர்ப்போர்களிடேயும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதிவாய்ந்த காளைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
















