வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது…. பலவீனமான நாடுகள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் டிரம்பின் நடவடிக்கை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது
வெனிசுலா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்கா, அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் சிறைபிடித்தது… வெனிசுலாவின் செழிப்பான எண்ணெய் வளத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்… அமெரிக்காவின் வெளிப்படையான அத்துமீறலை சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்த நிலையில், அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அதிபர் டிரம்ப்
வெனிசுலா அதிபர் கைது நடவடிக்கைக்கு பின்னர், அமெரிக்காவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவுக்கும் தனது அதிகார மமதையால் மிரட்டல் விடுத்திருக்கிறார் டிரம்ப்… கியூபாவின் 50 சதவிகித எரிசக்தி தேவையை வெனிசுலா பூர்த்தி செய்துவந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால் கியூபாவுக்கான எரிசக்தி சங்கிலி அறுந்துள்ளது…. இதனை கோடிட்டு காட்டியுள்ள டிரம்ப், கியூபா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், வாஷிங்டனின் தலையீடு இன்றி கியூபா தானாகவே வீழும் என்றும், விரைவில் கியூபா மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்,
ஒருவேளை அமெரிக்கா, கியூபாவை கைப்பற்றினால் அதிபராக மார்கோ ரூபியோ நியமிக்கப்படுவாரா என நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு இது நல்ல யோசனை என்று ஆமோதித்துள்ளார் டிரம்ப்… வெனிசுலாவிடம் இருந்து அதிகளவு எண்ணெய், பணத்தை பெற்று வாழ்ந்த கியூபா, வெனிசுலாவின் கடைசி இரண்டு சர்வாதிகாரிளுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியதாகவும், இனி அது தேவைப்படாது என்றும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்… உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவமான அமெரிக்கா, தற்போது வெனிசுலாவிடம் உள்ளதாகவும், இனி கியூபாவுக்கு எண்ணெயோ, பணமோ செல்லாது என்றும் கூறியுள்ளார்,
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, கியூபாவின் அடுத்த அதிபர் என்ற கருத்தை டிரம்ப் ஆழமாக ஆமோதித்திருப்பது கியூபாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது… டிரம்பின் அறிக்கைக்கு பதிலளித்த கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், மற்ற நாடுகளுக்கு வழங்கிய பாதுகாப்பு சேவைக்கு கியூபா எவ்வித பணமோ, பொருளோ பெறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். அமெரிக்காவைப் போல் அல்லாமல், கியூபா மற்ற நாடுகளுடனான அதன் பரிவர்த்தனைகளில் கூலிப்படை, மிரட்டல் அல்லது ராணுவ வற்புறுத்தலை நம்பியிருக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்
அமெரிக்காவின் அதிகார துஷ்பிரயோகமும், டிரம்பின் அடாவடி பேச்சும், உலக நாடுகளின் அமைதியையும், பாதுகாப்பையும் அச்சுறுத்துவதாகக் கண்டித்துள்ளார்.. உரிமையும், நீதியும் கியூபாவின் பக்கம் இருக்கும் நிலையில், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை தங்கள் தேசத்திற்காக போராடுவோம் என்றும் ரோட்ரிகஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்…அமெரிக்காவின் தலையீடு இல்லாமல், எரிபொருளை ஏற்றுமதி செய்யும் எந்த நாடுகளிடமிருந்தும், வர்த்தகம் செய்யும் உரிமை கியூபாவுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்,
முன்னதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் விதமாக லத்தீன் அமெரிக்கா ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுத்தார். லத்தீன் அமெரிக்க நாடுகள் வெளிநாட்டு சக்திகளின் சேவகர்களாக மாறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்,
இந்த சூழலில் வெனிசுலாவின் செயல் அதிபர் ஜனவரி 2026-இல் பதவியேற்பார் என்ற அறிவிப்பில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ உருவப்படம் இடம்பெற்றிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தப் படம் டிரம்பை அமெரிக்காவின் 45 மற்றும் 47வது அதிபராகவும் பட்டியலிட்டுள்ளது. மதுரோவின் நீக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மத்தியில் வெனிசுலாவின் துணைத் தலைவரும், பெட்ரோலிய அமைச்சருமான டெல்சி ரோட்ரிக்ஸ், அண்மையில் இடைக்கால அதிபராக முறையாகப் பதவியேற்றார். இந்த சூழலில் அமெரிக்க அதிபர் செயல் அதிபராக உள்ளதாக பரவும் தகவல் புவிசார் அரசியலில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது… அனைத்து நாடுகள் மீதும் அடக்குமுறையை கையாளும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது…
















