ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்த நிலையிலும் 12,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடும் பொருளாதார வீழ்ச்சியடைந்திருக்கும் ஈரானில், இஸ்லாமிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் இரண்டு வாரங்களைக் கடந்தும் தொடர்கிறது.
ஈரானில் தலைநகர் முதல் அனைத்து மாகாணங்களிலும், 200க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களிலும் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.
1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியால் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர் ஷா-வின் மகனான ரெசா பஹ்லவியின் அழைப்புக்கு பிறகு ஈரானில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
மக்கள் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் இணைய மற்றும் தொலைதொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இணைய முடக்கத்தின் போது, போராட்டக்காரர்கள் காணொளிகளைப் பெறுவதற்கும் ஒருங்கிணைப்பு செய்வதற்கும், ஈரானில் நடக்கும் அடக்குமுறைகளை வெளி உலகத்துக்குக் கொண்டு சேர்க்கவும் ஸ்டார்லிங்க் மட்டுமே ஒரே வழியாக இருந்தது.
எனவே, ஸ்டார்லிங்க் டிஷ்களையும், உபகரணங்களையும் தேச விரோத உளவு சாதனங்களாக அறிவித்துள்ள ஈரான் அரசு, பல்வேறு இடங்களில் ஸ்டார்லிங்க் டெர்மினல்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும், தேசத்துரோக குற்றத்தின் கீழ் ஸ்டார்லிங்க்கை பயன்படுத்தியவர்களை கைது செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக் கிழமையும் “தீர்ப்பு நாள்” போல இருந்தாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தெருக்களில் திரண்டு முழக்கங்கள் மட்டுமே எழுப்பிய மக்களைக் குருவிகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்றனர்.
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கீழ் செயல்படும் துணை ராணுவமான பசிஜ் படையினர், குறுகிய தெருக்களுக்குள் நுழைந்து, குடியிருப்புவாசிகளையும் சுட்டுக் கொன்றனர்.
பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. பிணங்கள் “ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப் பட்டுள்ளன.
குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கு முன்பாக கொன்ற தோட்டாக்களுக்கான கட்டணம் மற்றும் அரசுக்கான இழப்பீடு வசூலிக்கப்படுவதாகவும், கட்டாத குடும்பங்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி காண்போர் நெஞ்சை உலுக்கியுள்ளன. டெலிகிராம் சேனலான வாஹித் ஆன்லனில் 16 நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.
இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் சுமார் 600 மைல்கள் பயணம் செய்து இந்த வீடியோ அனுப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணவறை வளாகத்திற்குள் இரத்தக் கறை படிந்த ஆடைகளின் குவியல்களுடன், துப்பாக்கிச் சூடு மற்றும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் உடல்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு வீடியோவில் டெஹ்ரானின் காஹ்ரிஸாக் தடயவியல் மருத்துவ மையத்தில் அதிகளவிலான சடலங்கள் இருப்பதையும் பல குடும்பங்கள் துக்கத்துடனும் சடலங்களை அடையாளம் காண்பதிலும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
இன்னொரு வீடியோ, கருப்புப் பைகளில் பல சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு வெளியே உள்ள தெருவில் சடலம் இருப்பதையும் காட்டுகிறது.
மற்றொரு வீடியோவில் சேமிப்பு அறை ஒன்றில் பல உடல்கள் இருப்பதையும் ட்ரக் ஒன்றிலிருந்து இறந்தவர்களின் உடல்களைச் சிலர் வெளியே எடுப்பதையும் பார்க்க முடிகிறது.
இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்புவதாகவும், ஆனால் அதைவிட அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்தார்.
அந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. வேறு சில மதிப்பீடுகள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம் என்று கூறுகின்றன.
“இஸ்லாமிய குடியரசு பின்வாங்காது” எனத் தெரிவித்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் உத்தரவின் படியே இந்த மோசமான இனப் படுகொலைகள் நடந்து வருகிறது.
மிருகத்தனமான அரசுக்கு எதிராக வெறுங்கைகளுடன் போராடும் சொந்த நாட்டு மக்களையே கொல்லும் ஈவு இரக்கமற்ற இஸ்லாமிய அரசுக்கு எதிராக, ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா உதவும் என்று அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
















