உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பொதுகம்பட்டியை சேர்ந்த அஜித் முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு இம்முறையும் சிறப்பாக நடத்தப்பட்டது. காலை முதலே மாடுபிடிவீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் காத்திருந்த நிலையில் துணை முதலமைச்சரின் வருகைக்காக போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் உறுதிமொழி வாசிக்கப்பட்ட நிலையில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறக்கப்பட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது.
இதனையடுத்து ஆட்டம் பாட்டத்துடன் அழைத்துவரப்பட்ட கோயில் காளைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, பின்னர் விழா கமிட்டியினர் சார்பில் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது அதனை பிடிக்காமல் மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஒதுங்கி நின்றனர்.
இரண்டாவது சுற்றில் களமிறக்கப்பட்ட நடிகர் சூரியின் காளை யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது, வெற்றி பெற்ற இவரது காளையை அனைவரும் வியப்புடன் பார்த்து ரசித்தனர். இதற்கிடையே யாரிடமும் பிடிபடாமல் வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பில்கேட்ஸ் என்ற காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதோடு , அதன் உரிமையாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது
தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் இறுச்சுற்று முடிவில் அஜித், பிரபாகரன் ஆகியோர் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து விழா கமிட்டியினர், அஜித் முதலிடம் பிடித்ததாக அறிவித்தனர். இதனையடுத்து அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 3வது இடம் பிடித்த கார்த்திக் ஆகியோருக்கு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கோச்சடையை சேர்ந்த விக்கி என்பவரின் காளை கம்பீரமாக நடந்து வந்த நிலையில் அதனை நெருங்க முடியாமல் வீரர்கள் திகைத்து நின்றனர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்த காளை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதே போல குலமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் காளை யாரிடமும் பிடிபடாததால் சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு டிராக்டர் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதேபோல் 2வது இடம் பிடித்த கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளைக்கு, கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்பட்டது.
















