பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்கப்படாத காளைகளுக்கு பரிசுகள் வழங்காமல் சென்றதால், பரிசுப் பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் ஏறி காளை உரிமையாளர்கள் விருப்பப்பட்ட பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டி துணை முதலமைச்சர் உதயநிதியின் தாமதமான வருகையால், 9 மணிக்கு மேல் தொடங்கப்பட்டது.
வாடியில் களமிறங்க ஆயிரம் காளைகள் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், போட்டி தாமதமாக தொடங்கியதால் 100-க்கும் மேற்பட்ட காளைகள் வாடியில் அவிழ்க்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து அவிழ்க்கப்படாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், கமிட்டி நிர்வாகிகள் சொன்னபடி பரிசுகளை வழங்காமல், அவற்றை வாகனத்தில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான காளை உரிமையாளர்கள், பரிசு பொருட்கள் ஏற்றிச் சென்ற வாகனத்தில் ஏறி தங்களுக்கு விருப்பமுள்ள பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
















