அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறந்த மாடு பிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், காளைகளுக்கென பிரத்யேக சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இம்முறையும் சிறப்பாக நடத்தப்பட்டது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வருகை தந்தார். அப்போது அவருக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நினைவு பரிசுகளை வழங்கி வரவேற்பளித்தனர்.
ஜல்லிக்கட்டு மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் பழனிவேல்தியாகராஜன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்ததோடு இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரருக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கென அலங்காநல்லூரில் பயிற்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
















