திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதேபோல் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு முயல் விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அப்போது குழந்தைகளுக்கு தோஷம் நீங்கும் வகையில் முயலை குழந்தைகள் மேல் வைத்து எடுத்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் யாரும் பிடிக்க முடியாத அளவிற்கு முயலை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள கரும்பு தோட்டத்தில் விட்டனர். இந்த விநோத திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு குதிரை பந்தயம் போட்டி நடைபெற்றது. புதுக்குதிரை ,கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என்று நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கேசவன்புத்தன்துறை கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்று பரிசுகள் மற்றும் கேடயங்களை பெற்றனர்
















