காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற மாணவரின் ஊக்கமளிக்கும் அனுபவத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் பழனிவேல் என்ற மாணவர் கலந்து கொண்டார். காசி தமிழ் சங்கமத்தில் 9 நாட்கள் பங்கேற்ற அவர், தனது அனுபவங்களை பகிர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, மாணவரின்
காசி பயண அனுபவம் குறித்து அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய இளம் பங்கேற்பாளர்கள் மற்றவர்களையும் ஊக்குவித்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காசி தமிழ் சங்கமத்தின் மீது மாணவர் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாணவரின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை கூறியுள்ளார்.
மேலும், கடிதப் பரிமாற்றம், கங்கை கரைகளிலிருந்து தெற்குக் கடலோரம் வரை விரிந்துள்ள இந்தியாவின் உயிர்ப்பான நாகரிக ஒற்றுமைக்கு ஒரு வலுவான சாட்சி என்றும், பண்பாடு, ஆன்மிகம் மற்றும் இளைஞர்கள் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















