கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரி அச்சுறுத்தலை ஐரோப்பா எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 150 ஆண்டுகளாக பல அமெரிக்க அதிபர்கள்,கிரீன்லாந்தை கைப்பற்ற பல வழிகளில் முயற்சி செய்து தோற்றுள்ளனர்.
முதல் முறையாக அமெரிக்க அதிபரானதுமே 2019ம் ஆண்டு கிரீன்லாந்து அமெரிக்காவுக்குத் தேவை என்று ட்ரம்ப் அறிவித்தார்.
6 ஆண்டுகள் கழித்து இப்போது கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளும் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
ஆா்க்டிக் மற்றும் வட அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து டென்மாா்க் நாட்டுக்குச் சொந்தமான தன்னாட்சி நாடாக உள்ளது.
உலக அமைதி ஆபத்தில் உள்ளதாகவும் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும் என்று கூறியுள்ள ட்ரம்ப், இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே டென்மார்க்கால் கிரீன்லாந்தைப் பாதுகாக்க முடியாது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் வரிகளை வசூலிக்காமல் அமெரிக்கா மானியம் வழங்கி வருவதாக கூறியுள்ள ட்ரம்ப், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
தனது முடிவுக்கு எதிராக உள்ள டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு முதலில் 10 சதவீதமும் அடுத்து 25 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், டென்மாா்க் மற்றும் கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக நிற்பதாகவும் ஒருமைப்பாடு, இறையாண்மை மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ள 8 நாடுகளும், கிரீன்லாந்து தொடர்பாக பேச்சுவாா்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, ட்ரம்பின் வரி விதிப்பு காரணமாக, கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்துக்கு முறைப்படி ஒப்புதல் அளிப்பதை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், வரும் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் நடக்கவுள்ள அவசர உச்சி மாநாட்டில், அமெரிக்கா மீது 107.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு வரிகளை விதிக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. இந்த வரிவிதிப்பு வரும் பிப்ரவரி 6ம் தேதி தானாகவே நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் எழுதப் பட்ட பதாகைகளையும், தேசியக் கொடியையும் ஏந்தியவாறு ட்ரம்புக்கு எதிராக, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கிரீன்லாந்தில் மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள், அமெரிக்கா தொலைந்து போகட்டும் என்று முழக்கமிட்டனர்.
வரும் புதன்கிழமைகிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF), ட்டோ தலைவர்களை ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.
இந்த நேரடிச் சந்திப்பில் ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலுக்கு ட்ரம்ப் பணிவாரா? கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தைக் கை விடுவாரா ? என்பது விரைவில் தெரியவரும்.
















