மதுரையில் யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைப்பதற்காக வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வரும் நிலையில், உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப்பில் “இணைவோம் இயற்கையுடன்” என்ற வீடியோவை பார்த்துள்ளார்.
அதில் கூறியதுபோல, கடந்த 16ஆம் தேதியன்று வெங்காரம் என்ற நாட்டு மருந்து பொருளை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார்.
வெங்காரத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவிக்கு வாந்தி, வயிற்றுபோக்கு மற்றும் ரத்துப்போக்கு ஏற்பட்டதால் அவரை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த கலையரசிக்கு அதீத வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தினரின் உதவியோடு அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சமூகவலைதளங்களை பார்த்து மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என்றும், தனது மகளை போன்று யாரையும் இழந்துவிடக்கூடாது எனவும் மாணவியின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
















