தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி செங்கல்பட்டில் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நாளை பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
















