திருச்செந்தூர் அருகே 4- வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த தாயின் காதலனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்த சத்தியா என்பவர் தனது 2வது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குலசேகரன்பட்டினத்தில் தனது 4 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவருக்கும் சத்தியாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, உடன்குடி செட்டியாபத்து பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையை விஷவண்டு கடித்து விட்டதாக இருவரும் உடன்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து உடற்கூராய்வு செய்ததில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அப்போது மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய தாயின் காதலன் இசக்கிராஜாவை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
















