இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். புவிசார் அரசியலில் பெரும் திருப்பமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் சுங்கவரி, ஒதுக்கீடுகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் போன்ற பல்வேறு தடைகளைக் குறைப்பதற்கும், பொருட்கள் மற்றும் சேவைகளின் சீரான நகர்வுக்கு ஏற்ற விதிகளை உருவாக்குவதற்கும் 20 ஆண்டுகளுக்கு முன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கின.
2007 மற்றும் 2013-க்கு இடையில், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் சந்தை அணுகல், சுங்கவரிகள், அறிவுசார் சொத்துரிமைகள், தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள் போன்ற பல்வேறு முரண்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராமல் இருந்தன.
2022ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கவும், கணிக்கக்கூடியதாகவும், அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும் மாற்றுவதற்காக ஐரோப்பிய யூனியன் -இந்தியா வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியதற்குப் பிறகு வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
கடந்த வாரம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தகத்துக்கான ஆணையாளர் மரோஸ் ஷெஃப்கோவிக்கைச் சந்தித்த பிறகு, இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஒப்பந்தத்தில் 24 அத்தியாயங்களில் 20-ல் கையெழுத்திட்டுள்ளதாகவும், வரும் 27 ஆம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்க வரும் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், இந்திய- ஐரோப்பிய யூனியன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று கூறப் படுகிறது.
ஐரோப்பிய யூனியனுடன் நீண்டகாலமாகவே மிகப்பெரிய வர்த்தக உறவை இந்தியா கொண்டுள்ளது. கடந்தாண்டு இருதரப்பு வர்த்தகம் 136.53 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 75.85 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா சுமார் 60.68 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஐரோப்பிய யூனியனுக்கு சுமார் 17 சதவீதமாகவும், ஐரோப்பிய யூனியனின் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவுக்கு சுமார் 9 சதவீதமாகவும் உள்ளது.
200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். கூடுதலாக, இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 சதவீதம் என்பது குறிப்பிடத் தக்கது.
2021 முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்கவும், கணிக்கக்கூடியதாகவும், அதிக லாபம் ஈட்டக்கூடியதாகவும் மாற்றுவதற்காக இந்த வர்த்தக ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமா காட்டி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் பன்முக வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் உலகளாவிய வர்த்தகப் போக்கை தலைகீழாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















