பாதுகாப்பு தளவாட இறக்குமதியாளராக இருந்துவந்த இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் புதிய மைல்கல்லாக ஆர்மீனியாவுக்கு பினாகா ராக்கெட் அமைப்பு அனுப்பபட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மல்டி பேரல் ராக்கெட் ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஏற்கெனவே DRDO உருவாக்கியுள்ள உலகின் மிகச் சிறந்த ராக்கெட் அமைப்புகளின் ஒன்றாக பினாகா ராக்கெட் அமைப்பை ஆர்மேனியா கொள்முதல் செய்வதற்கு 2022 ஆம் ஆண்டு சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி பினாகா ராக்கெட் அமைப்பின் முதல் தொகுதி நாக்பூரில் இருந்து ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பினாகா ஏவுகணைகளின் ஏற்றுமதி உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு சான்றாகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி சுமார் 24,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் 2014-ல் 46,425 கோடி ரூபாயில் இருந்த உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பினாகா MK-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பை இந்திய இராணுவத்தில் சேர்த்துள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அதைவிட மேம்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பை இராணுவத்தில் சேர்க்க திட்டமிடப் பட்டுள்ளது.
சிவபெருமான் பயன்படுத்திய மிகவும் சக்தி வாய்ந்த வில்லின் பெயர் தான் பினாகா. பினாகா என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த ராக்கெட் அமைப்பு இந்திய இராணுவத்துக்கு மிகப்பெரிய போர் ஆற்றலை வழங்கியுள்ளது.
புதிய தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு உயர்ந்த மலைப் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ப 45 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.
தொடர்ந்து, 120 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வகையில் இந்த பினாகா அமைப்பு மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய பினாகா Multi Barrel Rocket Launcher அமைப்பு, மிக குறுகிய நேரத்தில் அதிக இலக்குகளை அழிக்கக்கூடியதாகும்.
வெறும் 44 விநாடிகளில் 72 ராக்கெட்டுகளை ஏவி, வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 250 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து சென்று எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளையும் அழிக்க வல்லதாகும்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ள இந்த பினாகா ராக்கெட் அமைப்பை ஆர்மேனியா கொள்முதல் செய்துள்ளதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பினாகா ராக்கெட் அமைப்பை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்திய பாதுகாப்புத் துறைக்கான சீர்திருத்தங்களின் ஆண்டாக கடந்த ஆண்டை இந்தியா அறிவித்தது. அதன்படி, சைபர், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஹைப்பர்சோனிக்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தளங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தது.
உலகளவில் ராணுவத்துக்கு செலவிடும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மொத்த 6.81 லட்சம் கோடி ரூபாய்க்கான ராணுவ பட்ஜெட்டில் 2.67 லட்சம் கோடி ரூபாயை நவீனமயமாக்கலுக்கு இந்தியா ஒதுக்கியுள்ளது.
உள்நாட்டு கொள்முதல் மற்றும் தேவையான இறக்குமதிகளுக்கு இடையில் சமமாக இந்த நவீனமயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரித்துள்ள மத்திய அரசு, உலகளாவிய நிறுவனங்களை விற்பனை நிறுவனங்களாக மட்டும் பார்க்காமல், கூட்டு தயாரிப்பு நிறுவனங்களாகவும் மாற்றியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் தேவைகளில் சுமார் 65 சதவீத தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுகிறது. செலவு குறைந்த மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் சர்வதேச நாடுகளால் பெரிதும் விரும்பப் படுகின்றன.
அதன் தொடக்கமாகவே அர்மேனியாவுக்கான பினாகா ராக்கெட் அமைப்பின் ஏற்றுமதி அமைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்றுமதி என்பது வெறும் வருமானத்துக்கான வழிமுறை மட்டுமல்ல நாட்டின் இராஜதந்திர செல்வாக்கு என்பதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உலக அளவில் நிரூபித்துள்ளது.
குறிப்பாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய வரலாற்று சாதனையாகவே அமைந்துள்ளது.
















