காசாவை புனரமைக்க ட்ரம்ப் உருவாக்கியுள்ள Board of Peace குழுவில் இணைந்த பாகிஸ்தானின் முடிவுக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காசாவில் பாலஸ்தீனர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி என்றும், உலக அளவில் ஐநா சபையை புறக்கணிக்கும் செயல் என்றும் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.
இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் பிரிட்டனின் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் இடம் பெற்றுள்ளனர்.
போரால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வாரியத்தில் இணைவதற்கு, இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
ஏற்கெனவே துருக்கி, கத்தாா் ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால் அந்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்கை அரசியல் மற்றும் ஒழுக்க ரீதியாக அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்ற கூறியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த அமைதி திட்டம் ஒரு புதிய காலனித்துவ முயற்சியின் தெளிவான அடையாளம் என்றும், காசா புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் மேற்பார்வை ஆகியவற்றை அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி என்றும் தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், குறுகிய கால கணக்கீட்டால் எடுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் நாட்டுக்கு பெரும்பாலும் நீடித்த சிக்கல்களையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதேபோல், நாடாளுமன்றத்தில் பொது விவாதம் ஏதும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் சேரும் முடிவு, பிரதமர் Shehbaz Sharif அரசு, நாட்டை புறக்கணிதுள்ளதாக (Tehreek-i-Tahafuz-i-Ayeen-i-Pakistan ) தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் தலைவர் (Mustafa Nawaz Khokhar) முஸ்தபா நவாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.

மேலும் , நிரந்தர உறுப்பினராவதற்கு ஒரு பில்லியன் டாலர் என்று விலை வைத்திருப்பதால் இது பணக்காரர்களின் சங்கத்தை உருவாக்குகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் பெரும்பாலும் என்ன செய்யும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு ஒரு விவேகமற்ற முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ள ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் (மலீஹா லோதி), மலீஹா லோதி, தான் எடுக்கும் எடுக்கப் போகும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவையும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுவதற்காகவே ட்ரம்ப் இந்த அமைதி வாரியத்தை உருவாக்க்கியுள்ளார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான் பதிவிட்டுள்ளார்.
பாலஸ்தீனிய இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேலுடன் இந்த ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் அமரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ இது பாகிஸ்தானுக்கு அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.
















