நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஒப்பந்தங்கள் மற்றும் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
ஆனால், தமிழக காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த தமிழக அரசு, டிஜிபி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜனவரி 28ம் தேதி வரை அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்திவைத்தனர்.
















