காவலர்களின் பாதுகாப்பை சூறையாடி, தமிழகத்தை திமுக அரசு பேரழிவில் நிறுத்தியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பெரம்பலூரில் ரவுடி வெள்ளை காளியை கொலை செய்வதற்காக காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி என்றும்,
துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமின்றி, தற்போது காவலர்களின் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தை திமுக அரசு பேரழிவில் நிறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் திமுக ஆட்சியை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் எனத் தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக ஆட்சி, அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
















