பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக விஜய்யை பனையூர் பண்ணையார் என விமர்சித்து அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசுக்கு அடிமை என்பது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது என்றும், மாநில நலன்களுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வரும் போதெல்லாம், தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் அதிமுகதான் என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பிளாக் டிக்கெட் விற்றதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி என்று விமர்சித்த அதிமுக, அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டும் ஊழல் அல்ல என்றும், தனது செல்வாக்கை பயன்படுத்தி வருமான பெருக்கத்திற்காக அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் ஊழல்தான் என்றும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு, செங்கோட்டையனை பக்கத்தில் வைத்திருப்பது தான் உங்கள் தூய ஆட்சியா? என்று கேள்வி எழுப்பிய அதிமுக, கரூர் சம்பவத்தில் 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது.
தன் மேல் வழக்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில்தான் விஜய் 72 நாட்களுக்கு மேல் பனையூரில் பதுங்கிக் கிடந்ததாகக் கூறிய அதிமுக, உலக வரலாற்றிலேயே இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது இதுவே முதல்முறை என்றும் சரமாரியாக விஜய்யை தாக்கியுள்ளது.
மேலும் அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் தூக்கிய எறிய வேண்டும் எனவும் அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















