நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளரான லெப்ட் பாண்டி, தனது சமூக வலைதளப் பக்கங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆதரவாகத் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். சமீபத்தில், நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தவெக தலைவர் விஜய் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, லெப்ட் பாண்டி வெளியிட்ட வீடியோ ஒன்றில் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனை ஆபாசமான வார்த்தைகளால் விமர்சித்ததோடு, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நாதக தேனி மாவட்ட கிழக்குச் செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தவெக மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
















