குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் சார்பாக உலக நாடுகளுக்குத் தகவல்களைத் தெளிவாக எடுத்துரைத்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில், அவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த பதக்கத்தை அறிவித்துள்ளது.
அதேபோல், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனைக்காக அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டுக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய அனைத்து பத்ம விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். தங்களது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் சேவை நமது சமுதாயத்தின் வளமைக்கு உதவிகரமாக அமைந்தது எனவும் இந்த கௌரவம், அடுத்த தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.

















