இந்தியா- ஐரோப்பியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு கேம் சேஞ்சராக அமைந்துள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கேம் சேஞ்சராக அமையும் எனவும் கூறியுள்ளார்.
ஜவுளி துறைக்கு பூஜ்ஜிய வரி என்பதால் 263 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஜவுளி சந்தையில் திருப்பூர், ஈரோடு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அச்சமின்றி போட்டியிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஒசூர், கோவை, தூத்துக்குடி, நாகை ஆகிய இடங்களில் இருந்துவரும் வாகன உதிரி பாகங்கள், கடல்சார் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல் மற்றும் காலணி பொருட்களுக்கு வரி நீக்கப்படுவது வேலூர் மற்றும் ஆம்பூர் போன்ற தொழில் மையங்களுக்கு உத்வேகம் அளிக்கும் எனக் கூறியுள்ள அண்ணாமலை, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் முதல், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்கள் வரை தமிழகத்தின் பிற மாவட்டங்கள் இந்த ஒப்பந்தத்தின் சாதகமான அம்சங்களை உணரும் எனவும் கூறியுள்ளார்…
















