உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள மடிக்கணினிகள் சமூக வலைதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 5ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இலவச மடிக்கணினிகளை பெற்ற மாணவர்கள் அதன் மீதுள்ள கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படத்தை மறைத்து, தங்களுக்கு விருப்பான ஸ்டிக்கர்களை ஒட்டி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த செயல் அரசு தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலவச லேப்டாப்கள் விற்பனைக்கு என்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்கள் வழியாக இலவச லேப்டாப்களை 10 ஆயிரம் ரூபாய் வரை மாணவர்கள் விற்பனை செய்து வருவதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
லேப்டாப் வழங்கியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல், அதன் நிலை, பயன்பாடு குறித்து கண்காணிக்க அரசு ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
















