கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கள்ளழகா் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுப்படும் அரசாணையை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரபு, வெங்கடேஷ் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கோயிலின் உபரி நிதியை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது என்றும், கள்ளழகா் கோயில் நிதியில் இருந்து 40 கோடி ரூபாய் செலவில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.
கோயிலின் நிதி யாரால், எவ்வாறு தணிக்கை செய்யப்படுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது எனக்கூறிய நீதிபதிகள், கோயிலில் தணிக்கை எப்படி செய்யப்படுகிறது என்ற விவரங்களை 2 வாரங்களுக்குள் அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.
கள்ளழகா் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டது தொடா்பாக 3 மாதங்களுக்குள் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















