மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் பணவீக்கம் மிதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில், 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைந்ததால் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும் எனவும், நிதிப்பற்றாக்குறையை 4.4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு பிற வளர்ந்து வரும் சந்தை நாணயங்களின் மதிப்புகளைவிட உயர்வாகவே பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது
மேலும் வரும் நிதியாண்டில் பணவீக்கம் என்பது மிதமாகவே இருக்கும் என தெரிவித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை, அதன் படி கடந்த டிசம்பர் மாதத்தில் 1.3% ஆக இருந்த பணவீக்கம் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 2.71% என்ற வரம்பை விட குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் 1ஆம் தேதி காலை 11 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மக்களவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















