சென்னைக்கு வேலை தேடி வந்த வடமாநிலத் தொழிலாளி குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரில் அரங்கேறியிருக்கும் இத்தகைய கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூ சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூம் அருகே ரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பது தெரியவந்தது. கவுரவ் குமாரின் மனைவி முனித குமாரியும் மற்றும் அவரது 2 வயது மகன் பிரம்மினி குமாரும் எங்கே உள்ளனர் என்ற விசாரணை விரிவடையத் தொடங்கியது..
கவுரவ் குமார் கொலை வழக்கில் கிடைத்த துப்பின் அடிப்படையில் கிருஷ்ணபிரகாஷ் என்பவரை காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தின் செக்கியூரிட்டி வேலைக்கு முயற்சி செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகுமாரின் ஏற்பாட்டின் படி சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலை செய்து வரும் சிக்கந்தர் எனும் நபரின் தொடர்பு கிடைத்துள்ளது. தன்னிடம் வேலை கேட்டு வந்த கவுரவ் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் தங்க வைத்த சிக்கந்தர், இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொடுரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

தனது மனைவி தன் கண் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்க முயன்ற கவுரவ் குமாரும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்து தவித்த இரண்டு வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொலையான மூவரையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டிய கொடூரக் கும்பல், குழந்தையை மத்திய கைலாஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கால்வாயில் வீசியுள்ளனர். மனைவியை பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசிவிட்டு, கவுரவ் குமாரின் உடலை திருவான்மியூர் கடலில் வீச இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற போது இந்திரா நகர் அருகே மூட்டை கீழே விழுந்துள்ளது. இரவு நேரத்தில் அந்த மூட்டையை மீண்டும் தூக்க முடியாத காரணத்தினால் அதனை அங்கேயே போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சிக்கந்தரோடு, நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை தேடி நல்ல வாழ்க்கையை நாடி பல்வேறு கனவுகளை சுமந்து சென்னைக்கு வந்த குடும்பம், கொடூரமான ஆசைக்கும், மனிதநேயமற்ற வன்முறைக்கும் பலியாகியிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
















