இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) இணைந்து, ரஷ்யாவின் புகழ்பெற்ற சூப்பர்ஜெட்-100 (SJ-100) பயணியர் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
ஹைதராபாத்தில் நடைபெற்ற விங்ஸ் இந்தியா சர்வதேச விமானக் கண்காட்சியில் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உடன்பாடு கையெழுத்தானதாக ரஷ்ய செய்தி நிறுவனம் TASS தெரிவித்தது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியான இந்த ஒப்பந்தத்தின் கீழ் HAL நிறுவனம் இரட்டை இயந்திரம் கொண்ட குறுகிய தூர பயணியர் விமானங்களை தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்குள் சுமார் 10 விமானங்களின் உற்பத்தி தொடங்கப்படும் என HAL நிறுவனத்தின் தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சந்தை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விமானத்தின் உற்பத்திக்காக காத்திருக்காமல் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள HAL நிறுவனம், 10 முதல் 20 விமானங்களை ரஷ்யாவிடமிருந்து நேரடியாக வாங்கி குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. 87 முதல் 108 பயணிகள் அமரக்கூடிய SJ-100 விமானங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்தி, வேகமாக வளர்ந்து வரும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















