பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவரது கண் பார்வை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறையில் என்ன நடக்கிறது…இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்பட்ட இம்ரான்கான், 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் பரிசாக வழங்கிய 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்பனை செய்ய முயன்றதாகவும், ஊழல் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கான் தற்போது, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார்.
அவரது உடல்நலம் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்து வரும் நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது… அதில் இம்ரான்கான் கடுமையான கண் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நிரந்தரமாக பார்வையை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் இருந்து இம்ரான் கான் தனது குடும்பத்தினருடனோ அல்லது வழக்கறிஞர்களுடனோ எவ்வித தொடர்பும் வைத்திருக்கவில்லை. இம்ரான் கானுக்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், கண் மருத்துவ மதிப்பீட்டை நடத்துவதற்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜனவரி 31ஆம் தேதி தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் இம்ரானின் கண்பார்வை நீண்ட காலத்திற்கு பாதிக்கப்படக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்தின்படி , இம்ரான் தனது சட்டக் குழுவைச் சந்திக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டதாகவும், பல நீதிமன்றங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த விபரீதம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இம்ரான் கானுக்கு எதிராக அதிகாரிகள் வழக்குத் தொடரும் அதே வேளையில், அவரது வழக்கறிஞர்களுக்கு இம்ரானை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவது அபத்தமானது என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனிடையே இம்ரான் கானுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்தால் சிறைத்துறை நிர்வாகம், தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவரது சகோதரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இம்ரானுக்கு கடைசியாக கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில், தனது தனிப்பட்ட மருத்துவரை அணுக அனுமதி வழங்கப்பட்டது, அதன் பின்னர், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும், அவரது தனிப்பட்ட மருத்துவர் அவரை பரிசோதிக்க அனுமதிக்கப்படவில்லை.. அரசியல் பழிவாங்கும் நோக்கில் ஒரு கைதியின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விஷயத்தில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது அரசியலைப் பற்றியது அல்ல, ஆரோக்கியத்தைப் பற்றியது எனவும், எந்தவொரு அலட்சியமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் வலியுறுத்தி உள்ளது.
















