இந்தியா 5-ம் தலைமுறை தாக்குதல் திறன்கொண்ட LCH PRACHAND ஹெலிகாப்டர்களை உருவாக்கி, ஹிமாலய பருவ நிலைகளுக்கான செயல்திறனில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவிற்கு வல்லமை பெற்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 5‑ம் தலைமுறை தாக்குதல் திறன்கொண்ட LCH PRACHAND ஹெலிகாப்டர்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அவை 2027 – 2028ம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Hindustan Aeronautics Limited உள்நாட்டில் வடிவமைத்து உற்பத்தி செய்யும் இந்த ஹெலிகாப்டர்கள், குறைந்த செலவில் மேம்பட்ட செயல்திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் பறக்கும் தன்மை கொண்ட இந்த வகை ஹெலிகாப்டர்கள், ஹிமாலயப் பருவ நிலைகள் மற்றும் கடுமையான சூழல்களில் திறமையாக செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Air to Air மற்றும் Air to Ground மிசைல்கள், ராக்கெட்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளை ஏந்தி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள LCH PRACHAND ஹெலிகாப்டர்களில், கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள Electro Optical பாகுபாடு மற்றும் Helmet Mount System போன்ற மேம்பட்ட கருவிகள், இவற்றை அதிக செயல்திறன் வாய்ந்ததாக மாற்றுகின்றன.
62 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், மொத்தம் 156 LCH PRACHAND ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் உள்ளூர் தொழிற்சாலைகள் மற்றும் சிறு – நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு உருவாகி, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், PRACHAND ஹெலிகாப்டர்கள் மூலம் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்தும், சில முன்னணி ஹெலிகாப்டர்களுக்கு சமமான வல்லமை இந்திய ராணுவத்துக்கும் கிடைக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, உயரமான எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதனால் மேலும் வலுப்பெறும் என அவர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே இந்த திட்டம் “ஆத்மநிர்பர் பாரத்” திட்டத்தின் முன்முயற்சிகளுள் ஒன்று எனவும், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பையும், உற்பத்தி துறையையும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த LCH PRACHAND ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்திற்கும், விமானப்படைக்கும் புதிய சக்தி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















