தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை காத்து சோதனைகளில் துணையாய் நின்று, வெற்றியின் வழி காட்டி,உன் அருளால் எங்கள் வாழ்வெங்கும் நம்பிக்கை, ஆனந்தம் நிரம்பச் செய்ய உன்னை மனம் உருகி வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
நம் தமிழகத்தை இருள் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் விடியா திமுக ஆட்சியை அகற்ற அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நம் தமிழர்களின் வாழ்நாள் கோரிக்கையான தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ்
அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிததுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், ” கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் குடியின் ஆதி கடவுளாய், நாம் அன்போடு போற்றுகின்ற அருள்மிகு முருகப் பெருமானின் உகந்த தினமான ‘தைப்பூசம்’ திருநாள் வாழ்த்துகளை, உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
நமது தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற ‘வேல் யாத்திரை’ நிகழ்வின் போது, இத்திருநாளுக்கான அரசு விடுமுறையை பெற்றுத் தந்தோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம். மேலும், நம் மக்கள் அனைவருக்கும், அவரவர் நினைத்த நற்காரியங்களும், சகலவிதமான மகிழ்வோடு, அப்பன் முருகப் பெருமானின் அருளும் கிடைத்திட வேண்டுமென்று மனமார வேண்டிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
ஆன்மீக விழிப்புணர்வு இல்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை. அநீதியை எதிர்த்து நிற்கும் துணிச்சலும், தர்மத்தை காக்கும் உறுதியும் இந்த நன்னாள் நம் அனைவருக்கும் தரட்டும். அனைவரின் வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறையட்டும் என, முருகப் பெருமானிடம் வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளார்.
















