தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வயலூர் முருகன் கோயிலுக்குப் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து பாதயாத்திரை சென்றனர்.
வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் ஏந்தி பாதயாத்திரை சென்றனர்.
அதனை, விசுவ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி தொடங்கி வைத்தார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரையானது, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வயலூர் முருகன் கோயிலை அடைந்தது. அங்கு முருகப் பெருமானுக்கு புனித நீர் மற்றும் பாலினால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, உலக நன்மைக்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பாதயாத்திரையில், மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார், கோட்ட செயலாளர் முருகேசன், துறையூர் மாவட்ட தலைவர் வாளாடி சங்கர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
















