கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் உள்ள மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் பக்தர்கள் நடந்தும், ஓடியும் வாகனங்கள் மூலமாகவும் தரிசனம் செய்வார்கள்.
இதில், இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோயில் நுழைவு வாயில் முதல் கோயில் வரை 18 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை கண்டித்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தியும், கோசாலையில் உள்ள பசு மாட்டிற்குத் தங்களது கோரிக்கை மனுவை வழங்கியும், தாமிரபரணி ஆற்றில் மனுக்களை மிதக்க விட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
















