ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் தனியார் காலணி தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர், வழக்கம்போல இரவு வீட்டின் கேட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூங்க சென்றுள்ளார். நள்ளிரவு சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள், மின்சாரத்தை துண்டித்து வீட்டின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர்.
ஆனால், வீட்டின் பூட்டு உடைப்படாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், மாடியில் இருந்த டிஷ் ஆண்டனா, காரில் இருந்த ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வெளியே வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
















