துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மசோதாவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு அவசர கதியில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், வழக்கு விசாரணையின்போது பதிலளிக்கக் கூட அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தனர்.
அதே சமயம், இந்த சட்டத்துக்கு தடை கோரிய பிரதான மனு மீது உயர்நீதிமன்றம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதற்காக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணையை 6 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, வழக்கு விசாரணை முடியும் வரை இது சார்ந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்த எதிர் மனுதாரர், துணைவேந்தர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், அதுவரை துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.
















