இந்தியா – மலேசியா இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் ராணுவ மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் இரு நாடுகளுக்கிடையிலான உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, உலகளாவிய அமைதியற்ற சூழலில், கடல்வழி பாதுகாப்பில் இந்தியாவும் மலேசியாவும் தங்களின் முழுத் திறனைப் பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இதனை அடுத்து, இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பின்னர், இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும், இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார். இந்தியாவும், மலேசியாவும் ஒரு சிறந்த உறவை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடு மலேசியா என்றும், தமிழ் மொழி மீதான பொதுவான அன்பு இந்தியாவையும் மலேசியாவையும் இணைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வர்த்தகம், முதலீடு, மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவும், மலேசியாவும் உறவுகளை வலுப்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், 1957ஆம் ஆண்டு முதல் நீடிக்கும் இருநாட்டு உறவில், இந்த ஒப்பந்தங்கள் ஒரு புதிய மைல்கல் என குறிப்பிட்டார். குறிப்பாக, உக்ரைன் மற்றும் காசா போன்ற உலகளாவிய விவகாரங்களில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
















