சிறைப்பிடிக்கப்பட்ட 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை விடுவிப்பதற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ள பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் சிறையில் உள்ள பலூச் கைதிகளை விடுதலை என்ற செய்யவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். மேலும் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்று விடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்ட (Operation Herof) ஆபரேஷன் ஹெரோப் நடவடிக்கையில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் பலூச் விடுதலை இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது.
பெண் தற்கொலைப் படை வீரர்களும் இந்த தாக்குதலில் ஈடுட்டதாக பலூச் விடுதலை இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
50க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலின் போது பலூச் விடுதலை இராணுவத்தினர் பாகிஸ்தான் இராணுவ வீரர்களைக் கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, சிறைப்படிக்கப் பட்ட 17 பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த 10 பேர் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப் பட்டுள்ளனர்.
பலூச் தேசிய நீதிமன்றத்தில் முறையாக நடைபெற்ற விசாரணையில் காவலில் உள்ள 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது போர்க்குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை செயல்கள், பலூச் மக்களைக் கட்டாயமாக காணாமல் போகச் செய்வது உட்பட பலூச் மக்கள் இனப்படுகொலையில் தீவிரமாக பங்கேற்றது ஆகிய குற்றசாட்டுகள் ஆதாரங்களுடன் வைக்கப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தங்கள் தரப்பு கருத்துக்களை கூற வாய்ப்பும் வழங்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்ட 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்களையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில், பலூச் விடுதலை ராணுவத்தின் கட்டளை கவுன்சில், சர்வதேச போர் விதிமுறைகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது தொடர்பான நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி பாகிஸ்தானுக்கு ஏழு நாள் கருணை காலக்கெடுவை வழங்க முடிவு செய்துள்ளது.
7 நாட்கள் காலக் கெடு காலத்தில், ஏழு இராணுவ வீரர்களையும் பலூச் போர்க் கைதிகளை விடுவிப்பதற்காக பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலூச் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் விடுதலை இராணுவ அமைப்பின் ஊடகப் பிரிவான ஹக்கல் ஒரு வீடியோ செய்தியுடன் இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
பலூச் போர்க் கைதிகளை ஒப்படைக்காவிட்டால்,பலூச் தேசிய நீதிமன்றத்தின் உத்தரவின் படி, 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் பலூச் விடுதலை இராணுவம் உறுதிபட தெரிவித்துள்ளது.
கெடு விதித்து ஒரு நாள் முடிந்துள்ள நிலையில், இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
சொந்த வீரர்களின் உயிரைப் பாதுகாக்க உடனடி தீர்வு நடவடிக்கையை எடுக்கப்போகிறதா ? அல்லது வழக்கம் போல் மௌனத்தையும் அலட்சியத்தையும் கடைப்பிடிப்பதன் மூலம் தனது வீரர்களின் மரணத்துக்கு ஒப்புதல் அளிக்கப் போகிறதா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
















